மழையால் நீர்வரத்து அதிகரிப்பு கோமுகி அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்ந்தது

கல்வராயன்மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கோமுகி அணையின் நீர்மட்டம் தற்போது 38 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-31 00:21 GMT
கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலை அடிவாரத்தில் 44 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. இந்த அணை மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணையில் ஏற்கனவே 20 அடி தண்ணீர் இருந்தது. கோமுகி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கல்வராயன்மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் கோமுகி அணைக்கு தண்ணீர் வர தொடங்கியது.

இதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கல்வராயன்மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் 5 அடி உயர்ந்துள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதன் மூலம் கோமுகி அணையின் நீர்மட்டம் தற்போது 38 அடியாக உயர்ந்துள்ளது. பொதுவாக அணையின் நீர்மட்டம் 42 அடி உயர்ந்ததும், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணை விரைவில் நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து விரைவில் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கமாக கோமுகி அணை அக்டோபர் மாதத்தில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போதுதான் நிரம்பும். ஆனால் தற்போது பெய்து வரும் பலத்த மழையால் ஆகஸ்டு மாத தொடக்கத்திலேயே அணை நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்று நடப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்