கடையநல்லூரில் பயங்கரம்: தொழிலாளி வெட்டிக்கொலை

கடையநல்லூரில் தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-07-31 00:31 GMT
அச்சன்புதூர்,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கொள்ளி மாடசாமி (48) என்பவருக்கும் ஒரு வீட்டுமனை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது கொள்ளி மாடசாமி தெரு விளக்கை அணைத்துவிட்டு, செல்லத்துரையை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் செல்லத்துரை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொள்ளி மாடசாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பொதுமக்கள் போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சக்திவேல் (புளியங்குடி), கோகுலகிருஷ்ணன் (தென்காசி), பாலசுந்தரம் (சங்கரன்கோவில்), பாலாஜி (ஆலங்குளம் பொறுப்பு) மற்றும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, கொலையாளியை கைது செய்தால் தான் செல்லத்துரையின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதிப்போம் என்று கூறி அந்த பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வலைவீச்சு

இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கொள்ளி மாடசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டுமனை பிரச்சினையில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்