கொரோனாவை ஒழிக்க 4,148 முகாம்கள் மூலம் 2.40 லட்சம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு நல்ல பலன்

கொரோனாவை ஒழிக்க இது வரை மதுரையில் 4 ஆயிரத்து 148 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 2.40 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Update: 2020-07-31 02:01 GMT
மதுரை, 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடக்கம் முதலே மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கட்டுக்குள் இருந்த கொரோனா, பிற மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நபர்களால் மிக வேகமாக பரவ தொடங்கியது. தற்போதைய நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு தினமும் குறைந்து கொண்டே செல்கிறது.

அதற்கு முக்கிய காரணம், மதுரை மாநகராட்சி நடத்திய காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தான். அதாவது கொரோனா நோயாளிகளின் முதல் அறிகுறி காய்ச்சல் ஆகும். எனவே காய்ச்சல் வந்தவர்களை தனிமைப்படுத்தி விட்டால், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படும்.

பரிசோதனை

இந்த திட்டத்தின்படி கடந்த மாதம் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை மாநகராட்சி தொடங்கியது. இந்த முகாம் நடைபெறும் பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல் இருக்கிறதா என்று கணக்கெடுப்பார்கள். காய்ச்சல் இருக்கும் நபர்களை அழைத்து கொண்டு ஆரம்ப கட்ட பரிசோதனை நடத்துவார்கள். அதுதவிர காய்ச்சல் தவிர சளி, உடல் வலி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த காய்ச்சல் பரிசோதனைக்கு வருபவர்களின் வீடுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டன.

அதே போல் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களின் வீடுகள் தடுப்புகள் போட்டு அடைக்கப்பட்டன. கொரோனா தொற்று இல்லையென்றால் மட்டுமே அவர்களது வீடுகளின் தடுப்புகள் அகற்றப்படும். இது போன்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் அடுத்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவது ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்பட்டது.

நல்ல பலன்

இது வரை மாநகரில் மொத்தம் 4 ஆயிரத்து 148 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 646 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் தீவிர காய்ச்சல் இருந்தவர்களில் 32 ஆயிரத்து 155 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 780 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மாநகராட்சியின் காய்ச்சல் பரிசோதனை முகாமுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதால், இந்த முகாம்களை மாநகராட்சி தொடர்ந்து நடத்த முடிவு செய்து உள்ளது. மேலும் காய்ச்சல் மற்றும் சளி, உடல் வலி போன்ற எந்த பிரச்சினை இருந்தாலும் பொதுமக்கள் காய்ச்சல் முகாமுக்கு சென்று பரிசோதித்து கொள்ளலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் இந்த முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து தினமும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்