உடைந்த பல்புகளை மாலையாக அணிவித்து அவமதிப்பு: குழித்துறை அண்ணா சிலையில் காவி கொடி கட்டியதால் பரபரப்பு தி.மு.க.வினர் போராட்டம்

குழித்துறை சந்திப்பில் அண்ணா சிலையில் காவி கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-31 03:27 GMT
களியக்காவிளை.

கருப்பர் கூட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கந்தசஷ்டி கவசம் குறித்த வீடியோ சர்ச்சை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர்., அண்ணா சிலை மற்றும் பெரியார் சிலை அவமதிக்கப்படும் சம்பவம் தொடர்கிறது.

அதாவது அந்த சிலைகள் மீது காவிகொடி கட்டுவதும், காவி சாயம் பூசுவதும் தொடர்கதையாக மாறி வருகிறது. இதற்கிடையே கோவையில் தலைவர் சிலையை அவமதித்த நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழகத்தில் யார் செயல்பட்டாலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அண்ணா சிலை அவமதிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

காவி கொடி கட்டப்பட்டது

குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் ஆளுயர அண்ணா சிலை உள்ளது. இந்த சிலையில் நேற்று காவி கொடி பறந்தது. மேலும், உடைந்த பல்புகள் உள்ளிட்ட பொருட்களை மாலையாக கோர்த்து அண்ணா சிலைக்கு அணிவித்து அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலையில் இதனை பார்த்த தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான மனோ தங்கராஜ், நகர செயலாளர் பொன்.ஆசைதம்பி, நிர்வாகிகள் ஆசாத் அலி, ஷெர்லி நெல்சன் மற்றும் தி.மு.க.வினர் திரளாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். போராட்டத்தின் போது, அண்ணா சிலையை அவமதித்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை

உடனே போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வினர் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதுதொடர்பாக குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பொன்.ஆசைதம்பி களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையே போலீசார், காவி கொடி, பல்பு மாலையை அகற்றினர்.

காவி கொடியை அண்ணா சிலையில் கட்டியவர் யார்? என்பதை கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து தலைவர்கள் சிலை அவமதிக்கப்படுவது தொடர் கதையாகி வருவதால், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சம்பந்தப்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்