தஞ்சையில் தொடர்மழையால் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டும், மீன்களை விட்டும் பொதுமக்கள் போராட்டம்

தஞ்சையில் தொடர்மழையால் சேறும், சகதியுமான சாலையில் பொதுமக்கள் நாற்றுகளை நட்டும், மீன்களை விட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-31 05:18 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் 30-வது வார்டில் சின்ன அரிசிக்காரத்தெரு அருகே உள்ளது சக்கராகுளம். இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காணப்பட்டது. இதையடுத்து சாலையை சீர் செய்து தராததை கண்டித்து அந்த பகுதி மக்கள் சேற்றில் மீன்களை விட்டும், நாற்றுகளை நட்டும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

நாற்றுகளை நட்டனர்

அதன்படி நேற்று காலை சக்கராகுளம் தெருவில் பொதுமக்கள் சாலையில் உள்ள சேற்றில் நாற்றுகளை நட்டும், மீன்களை விட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலைகளை உடனடியாக சீர் செய்து தரக்கோரி கோஷங்களும் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர கிழக்குப்போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, குப்பைத்தொட்டி வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை சீர் செய்து தரக்கோரி நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த தெருக்களில் கிருமிநாசினியும் தெளிக்கப்படவில்லை”என்றனர்.

மேலும் செய்திகள்