நகை, பணம் கொள்ளை: தொழில் அதிபர் கடத்தலில் மூளையாக செயல்பட்ட நண்பர் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை

வில்லியனூர் அருகே தொழில் அதிபரை காரில் கடத்தி நகை, பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட அவரது நண்பர் உள்பட 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2020-07-31 23:49 GMT
வில்லியனூர்,

புதுவை சாரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் குருவேல் (வயது 56). அலுமினிய கதவு, ஜன்னல் விற்பனை கடை வைத்துள்ளார். இவரது செல்போனில் தொடர்பு கொண்டு பொருட்கள் வாங்க ஆர்டர் கொடுப்பது போல் பேசி வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு சாலை மகாசக்தி நகருக்கு வரவழைத்தனர். அங்கு அவரை மர்ம ஆசாமிகள் உருட்டுக்கட்டையால் தாக்கி காரில் கடத்திச்சென்றனர்.

ஓடும் காரில் வைத்து அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 2 மோதிரங்களை பறித்துக்கொண்டனர். மிரட்டி குருவேலை விட்டு செல்போனில் பேச வைத்து அவரது மகன் கொண்டு வந்த ரூ.1 லட்சத்தை பறித்துக் கொண்டனர். அதன்பின் குருவேலை அரும்பார்த்தபுரம் ரெயில்வே பாலம் அருகே விடுவித்து விட்டு அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

4 பேர் சிக்கினர்

இது குறித்து குருவேல் அளித்த புகாரின் பேரில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். குருவேலுடன் தொடர்புகொண்ட செல்போன் எண், கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் பதிவு எண்ணை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், குருவேல் கடத்தல் சம்பவத்தில் அவரது நண்பர் ஒருவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அரும்பார்த்தபுரம் கோபாலகிருஷ்ணன், ஜி.என்.பாளையம் சந்திரமோகன், முரளி, வினோத்குமார் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் நேற்று சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பரிசோதனை முடிவுக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்