பெண் என்ஜினீயர் தற்கொலை வழக்கில் கணவர் கைது வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த சோகம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண் என்ஜினீயர் தற்கொலை வழக்கில் வரதட்சணை கொடுமையின் கீழ் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-08-01 00:22 GMT
சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பள்ளி தெரு பகுதியை சேர்ந்த என்ஜினீயரான பிரியங்காவுக்கும்(வயது 24), செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் நிரேஷ்குமார்(28) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

நிரேஷ்குமார் ஐதராபாத்தில் பணியாற்றி வந்ததால், இருவரும் அங்கு வசித்து வந்தனர். இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணமான 3 மாதங்களுக்கு பிறகு பிரியங்கா தனது கணவரை பிரிந்து, பெற்றோருடன் சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்தார். இந்தநிலையில் சில நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்ட அவர் கடந்த 29-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உருக்கமான கடிதம்

இந்த சம்பவம் குறித்து துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் அசோகன் ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பிரியங்கா தற்கொலைக்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில் பிரியங்கா கூறியிருப்பதாவது:-

திருமணத்துக்கு வரதட்சணையாக நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் 120 பவுன் நகைகள் கேட்டனர். முதலில் 40 பவுன் நகைகள் போடப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது. மீதமுள்ள 80 பவுன் நகைகள் கேட்டு நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் என்னை கொடுமைப்படுத்தினர்.

இதனால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்தேன். மேலும் எனது தந்தை மீண்டும் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என நிரேஷ்குமாரிடம் ஒவ்வொரு நாளும் கெஞ்சுவது கண்டு எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் கண்ணீர் விடுவதை என்னால் பார்க்க முடியவில்லை. நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் நான் இந்த முடிவை எடுக்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் வரதட்சணை கொடுமையின் கீழ் நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் மீது வழக்குப்பதிவு செய்து, நிரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்