காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.

Update: 2020-08-01 00:30 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 27 மற்றும் 21 வயது இளம் பெண்கள், மலைப்பட்டு பகுதியை சேர்ந்த 37 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 94 ஆக உயர்ந்தது. இவர்களில் 5,650 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 3,333 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 111 பேர் பலியாகி உள்ளனர்.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 7 பேர், நந்திரவம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி நகரில் ஒன்றரை வயதுடைய இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கண்ணதாசன் 2-வது தெருவில் வசிக்கும் 29, 30 வயது வாலிபர்கள் உள்பட 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 534 ஆக உயர்ந்தது. இவர்களில் 11 ஆயிரத்து 129 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்தது. 3,157 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 22 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 13 ஆயிரத்து 836 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதில், 9 ஆயிரத்து 978 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,619 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 10 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்