பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: திருவள்ளூர் மாவட்டத்தில் 95.62 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-1 பொதுத்தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 95.62 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2020-08-01 00:44 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-1 பொதுத்தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 486 மாணவர்கள், 21 ஆயிரத்து 955 மாணவிகள் என மொத்தம் 41 ஆயிரத்து 441 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் மாணவர்கள் 18 ஆயிரத்து 267 பேரும், மாணவிகள் 21 ஆயிரத்து 357 பேரும் என மொத்தம் 39 ஆயிரத்து 624 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 95.62 சதவீதம் ஆகும். அதில், மாணவர்களில் 93.74 சதவீதமும், மாணவிகளில் 97.28 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு தேர்வை காட்டிலும் இந்த ஆண்டு 1.23 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தேர்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 106 அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்து 989 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 13 ஆயிரத்து 458 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 89.79 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 86.61 சதவீதமும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 3.18 விழுக்காடு கூடுதலாகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 139 பேர் தேர்வு எழுதியதில், 129 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்