நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2020-08-01 01:11 GMT
தென்காசி,

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி முடிவடைந்தது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, வள்ளியூர் என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மேற்கண்ட 5 கல்வி மாவட்டங்களில் இருந்து 323 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

96.92 சதவீதம்

இந்த தேர்வை 36 ஆயிரத்து 912 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 35 ஆயிரத்து 680 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 96.92 சதவீதம் ஆகும். கடந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதம் 97.59 ஆக இருந்தது. கடந்த ஆண்டு மாநில தர வரிசை பட்டியலில் 5-வது இடத்தில் நெல்லை மாவட்டம் இருந்தது. இந்த ஆண்டு 15-வது இடத்துக்கு சென்று விட்டது.

கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி நடக்க இருந்த தேர்வு, கொரோனா வைரஸ் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று கணக்குப்பதிவியல், வேதியியல், புவியியல் ஆகிய பாடத்தேர்வுகள் நடத்துவதாக இருந்தது. அந்த பாடத்துக்கு வருகை பதிவேடு, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் போடப்பட்டு உள்ளன.

ஆலோசனை கூட்டம்

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் குறைவாக மதிப்பெண்கள் பெற்ற பள்ளிகளை கண்டறிந்து மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை அழைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

4 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

நெல்லை மாவட்டத்தில் அரசு, மாநகராட்சி, ஆதி திராவிடர் பள்ளி என 56 அரசு பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பிளஸ்-1 தேர்வை எழுதினர் இதில், வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பழவூர் அரசு மேல்நிலைப்பள்ளி, முதலியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கடம்பன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி என 4 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 64 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 79 தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 63 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்