மறைந்த முதல்-அமைச்சர்களுக்கு டெல்லியில் கார் ஓட்டிய டிரைவர் மர்ம சாவு - வாழப்பாடி அருகே கிணற்றில் பிணமாக மிதந்தார்

மறைந்த முதல்-அமைச்சர்களுக்கு டெல்லியில் கார் ஓட்டிய டிரைவர் மர்மமான முறையில் வாழப்பாடி அருகே கிணற்றில் பிணமாக மிதந்தார்.

Update: 2020-07-31 22:00 GMT
வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சி அணைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (வயது 64). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், யுவராஜ், மணி, ரவி என்ற மூன்று மகன்களும் உள்ளனர். இவர் தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் டிரைவராக 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து செல்லும் முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் டெல்லிக்கு சென்று தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்து ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகளை சந்திக்க செல்லும்போது, அரசுக்கு சொந்தமான காரில் டிரைவர் குமாரசாமி அழைத்துச் செல்வது வழக்கம். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு பலமுறை குமாரசாமி காரை ஓட்டியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற இவர், வாழப்பாடி அருகே தனது சொந்த கிராமமான குறிச்சி அணைமேட்டில் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 29-ந் தேதி முதல் அவர் திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று காலை வசிஷ்ட நதி கரையோரத்தில் இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 29-ந் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதும், அதன் பிறகு விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து பிணமாக மிதந்தும் தெரியவந்தது. இதனால் அவர் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்