சிவகங்கை மாவட்டத்தில், நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.12¾ கோடி ஒதுக்கீடு

சிவகங்கை மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.12 கோடியே 77 லட்சம் மானியம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-03 05:15 GMT
சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தை 2 ஆயிரத்து 216 எக்டர் பரப்பளவில் செயல்படுத்த ரூ.8 கோடியே 23 லட்சமும், துணை நிலை நீர் மேலாண்மை திட்ட பணிகளை செயல்படுத்த ரூ.4 கோடியே 54 லட்சமும் சேர்த்து ரூ.12 கோடியே 77 லட்சம் மானியம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படும். மேலும் சொட்டுநீர், தெளிப்பு நீர், மழை தூவாண் உபகரணங்கள் ஆகியவை வயலில் அமைத்து கொடுக்கப்படும். இத்திட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிர் பாசனம் அமைத்த விவசாயிகள் அதே இடத்தில் மீண்டும் பாசனம் அமைக்க மானியம் பெறலாம். 

மாவட்டத்தில் எஸ்.புதூரை தவிர அனைத்து வட்டாரங்களிலும் குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகள் செலவிடும் தொகையில் 50 சதவீதமாக அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்புசெட் ஆகியவை அமைப்பதற்கு ரூ.15 ஆயிரம் வரை 50 சதவீதமும், வயலுக்கு அருகில் பாசன நீரை கொண்டு செல்லும் வகையில், குழாய் அமைப்பதற்கு எக்டருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 50 சதவீதமும் வழங்கப்படும். இந்த பணிகளை விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மேற்கொண்டு அதற்கான முழு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். 
மானியம் விவசாயிகளின் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். மானியத்தை பெற விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு பயன் அடையலாம்.

இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்