க.பரமத்தி அருகே, மாணவர்களின் இருப்பிடம் சென்று பாடம் நடத்திய தலைமை ஆசிரியர்

க.பரமத்தி அருகே மாணவர்களின் இருப்பிடம் சென்று பள்ளி தலைமை ஆசிரியர் பாடம் நடத்தினார்.

Update: 2020-08-03 22:30 GMT
க.பரமத்தி, 

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 67 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 5-ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து 57 மாணவர்கள் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 2020-21-ம் ஆண்டில் கல்வி பயில்கின்றனர். தற்போது கொரோனா பரவலை தடுக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று காலை முதல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகமும், புத்தகப்பையும் வினியோகம் தொடங்கியது. இதையடுத்து தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.மூர்த்தி, மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஒவ்வொரு மாணவரையும் நேரில் சந்தித்து புத்தகங்கள் மற்றும் புத்தக பைகளை வழங்கினார்.

மேலும் புதிய புத்தகத்தில் உள்ள முதல் பாடத்தை மாணவர்களின் வீடுகளிலும், மர நிழல் மற்றும் கோவில் அருகிலும் வைத்து மாணவர்களையும், பெற்றோர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். இதில் அவர் மொத்தம் 95 கி.மீ தூரம் பயணம் செய்து மாணவர்களை சந்தித்து புத்தகம் வழங்கி பாடம் நடத்தி திரும்பினார்.

மேலும் தினமும் படிக்கும் பாடங்களை பள்ளியின் ‘வாட்ஸ்-அப்‘ குழுவில் பதிவிடுமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். தினமும் வீட்டுப்பாடங்களை செய்து ‘வாட்ஸ்-அப்‘பில் பதிவிடுமாறு மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்