அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையையொட்டி பஞ்சவடி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் பக்தர்கள் யூ-டியூப்பில் கண்டு தரிசித்தனர்

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமிபூஜை நடந்ததையொட்டி பஞ்சவடி கோவிலில் நேற்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இந்த காட்சியை பக்தர்கள் யூ-டியூப்பில் கண்டு தரிசித்தனர்.

Update: 2020-08-05 20:20 GMT
வானூர்,

திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்சவடியில், ஜெயமங்கள வலம்புரி ஸ்ரீமகாகணபதி, ஜெயமங்கள சீதா சமேத பட்டாபிசேக ராமச்சந்திர மூர்த்தி, லட்சுமணன், பரதன், சத்ருகனன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், விபீஷணன் மற்றும் அனுமன் ஆகியோரும், ஸ்ரீவாரி சீனிவாசர் மற்றும் பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சன்னதி நிர்மாணிக்கப்பட்டு பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட் மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றதையொட்டியும், விரைவில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும் பஞ்சவடி கோவிலில் எழுந்தருளியுள்ள ராமச்சந்திர சுவாமிக்கு நேற்று காலை 8 மணியளவில் பால், மஞ்சள், சந்தனம், கான்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட நறுமணமிக்க பன்னீர் மற்றும் இளநீர் போன்ற மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இந்த சிறப்பு திருமஞ்சனத்தை கோவில் பட்டர் ரங்கராஜ பட்டாச்சாரியார், கூடுதல் பட்டர் வாசுதேவ பட்டாச்சாரியார் உள்ளிட்டோர் சிறப்பாக நடத்தினர்.

யூ-டியூப்பில் ஒளிபரப்பு

இந்த நிகழ்ச்சியில் பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், கூடுதல் தலைவர் ஆர்.யுவராஜன், செயலாளர் எஸ்.நரசிம்மன், பொருளாளர் வி.கச்சபேஸ்வரன், டி.ஆர்.ராஜகோபாலன், கே.வெங்கட்ராமன், டாக்டர் எம்.பழனியப்பன், ஜி.செல்வம், வி.ஆர்.வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி கே.சந்திரமனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள ஏதுவான சூழ்நிலை இல்லாததால் கோவிலில் நடைபெற்ற திருமஞ்சன நிகழ்ச்சியை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடி நேரடியாக கண்டு தரிசிக்கும் வகையில் யூ-டியூப்பில் ஒளிபரப்பப்பட்டது.

சகஸ்ரநாம அர்ச்சனை

மேலும் தினமும் அனைத்து சன்னதிகளிலும் உலக நன்மைக்காகவும், தற்போது நிலவும் கொரோனா கொடிய தொற்று நோயை தடுத்து நிறுத்தவும், சகஸ்ரநாம அர்ச்சனை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்