விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் சாவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் இறந்தனர்.

Update: 2020-08-05 22:15 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் வரைக்கும் 4,055 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 3,121 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று 230 பேரின் பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 4063 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பார் கிராமத்தை சேர்ந்த 68 வயதுடைய முதியவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் மிகவும் அவதிப்பட்டார். இதற்காக அவர் கடந்த 2-ந் தேதி விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவருடைய உமிழ்நீர், பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. இதன் முடிவில் அவர், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கொரோனா வார்டில் அனுமதித்து டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் இறந்தார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் கொரோனா அறிகுறியுடன் கடந்த 3-ந் தேதி மதியம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கொரோனா வார்டில் அனுமதித்து டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார்.

மேலும் செஞ்சியை சேர்ந்த 73 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 400-க்கும் மேற்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் மேலும் 77 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மயிலம் போலீஸ் ஏட்டு, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு, நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 2-ல் பணியாற்றி வரும் போலீஸ்காரர், கோட்டக்குப்பம் போலீஸ் ஏட்டு, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய ஏட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர், விழுப்புரம் தீயணைப்பு வீரர், விழுப்புரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை, திருவக்கரை கிராம நிர்வாக அலுவலர், மயிலம் கால்நடை மருத்துவர் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,239 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 72 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்