அலமட்டி, பசவசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம்

அலமட்டி, பசவசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Update: 2020-08-06 20:24 GMT
விஜயாப்புரா,

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் மராட்டி எல்லையையொட்டியுள்ள வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதாவது பெலகாவி, விஜயாப்புரா, யாதகிரி, பல்லாரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மராட்டியத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து நேற்று கிருஷ்ணா ஆற்றில் 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் அந்த ஆற்றின் குறுக்கே விஜயாப்புராவில் அமைந்து உள்ள அலமட்டி, யாதகிரி அருகே நாராயணபுரா பகுதியில் உள்ள பசவசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 519.63 அடி உயரம் கொண்ட அலமட்டி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 517.92 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 57 ஆயிரத்து 25 கனஅடி தண்ணீர் வந்தது. அதே நேரத்தில் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 16 ஆயிரத்து 505 கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டது.

பசவசாகர் அணை

இதுபோல கடல்மட்டத்தில் இருந்து 492.25 அடி உயரம் கொண்ட பசவசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மதிய நிலவரப்படி 491.57 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 49 ஆயிரத்து 50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இந்த 2 அணைகளில் இருந்தும் கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 65 ஆயிரத்து 555 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக கிருஷ்ணா ஆற்றங்கரையையொட்டி வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம், ஆற்றங்கரையையொட்டிய விளைநிலங்களுக்குள்ளும் புகுந்துள்ளது. இதனால் பல நூறு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து நெல், மக்காச்சோளம், தக்காளி, கத்தரிக்காய் பயிர்கள் நாசமாகி உள்ளன. தொடர் கனமழையால் விஜயாப்புரா, யாதகிரி மாவட்ட மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்