புதிதாக 195 பேருக்கு தொற்று: புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி சாவு எண்ணிக்கை 70 ஆனது

புதுச்சேரியில் நேற்று புதிதாக 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது.

Update: 2020-08-06 20:51 GMT
புதுச்சேரி,

நேற்று முன்தினம் 940 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 195 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இவர்களில் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 126 பேர், ஜிப்மரில் 35 பேர், கொரோனா கேர் சென்டரில் 15 பேர், காரைக்காலில் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் தவிர புதுச்சேரியில் 456 பேர், ஏனாமில் 47பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் தற்போது 1,743 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 4,621 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கதிர்காமம் மருத்துவமனையில் 31 பேர், ஜிப்மரில் 10 பேர், கொரோனா கேர் சென்டரில் 42 பேர், ஏனாமில் 46 பேர் என 129 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,808 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

5 பேர் பலி

இந்தநிலையில் முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி தொற்றால் பாதித்து ஜிப்மரில் கடந்த 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சாரம் ஞானப்பிரகாசம் நகரை சேர்ந்த 55 வயது பெண் கடந்த 31-ந் தேதியும், முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்த 75 வயது முதியவர் கடந்த 2-ந் தேதியும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

புதுவை அரசு பொது மருத்துவமனையில் அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த 77 வயது முதியவரும், கொசப்பாளையத்தைச் சேர்ந்த 80 வயது முதியவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் 5 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களை சேர்த்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 44,158 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 224 பேர்களது முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்