ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-08-06 20:54 GMT
புதுச்சேரி,

புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இருப்பினும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனை வளாகம் முறையாக பராமரிக்கப்படாமல் அசுத்தமாக காணப்படுகிறது.

எனவே கதிர்காமம் மருத்துவமனையில் ஏற்கனவே பணி செய்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தி துப்புரவு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ.5 ஆயிரம் நிவாரணம்

கொரோனா நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள். இருப்பினும் நோயாளிகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் குணமடைவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே ஏனாமில் நோயாளிகளுக்கு வழங்கப்படுவது போல் புதுவையில் உள்ள நோயாளிகளுக்கும் சத்தான உணவுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரம் முடங்கிப்போய் உள்ளதால் புதுவையில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்