கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: கலெக்டர் எஸ்.சிவராசு எச்சரிக்கை

கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எஸ்.சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-08-07 00:32 GMT
திருச்சி, 

கொரோனா பரிசோதனைக் கான கட்டணத்தினை ரூ.2,500-ல் இருந்து ரூ.1,500-ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ளவர்களுக்கு ரூ.1,500 மட்டும் கொரோனா பரிசோதனைக்காக கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் பரிசோதனை மையத்திற்கு வர இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு மருத்துவ கல்லூரி முதல்வர், கண்காணிப்பாளர், தலைமை மருத்துவர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் அவர்களது வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்யவும் அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுபோல் தனியார் மையங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளும் பட்சத்தில் கூடுதலாக ரூ.500 வசூலிக்கப்படும். தற்போது புதிய முறையான குழு பரிசோதனை (பி.எஸ்.டி) முறையானது சுகாதாரத்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ளவர்களுக்கு இத்தகைய குழு பரிசோதனை மேற்கொள்ள ரூ.1,000 ஆக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல்செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்