பலத்த மழை எதிரொலி: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பலத்த மழை எதிரொலியாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2020-08-07 07:47 GMT
தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயர வைகை அணை அமைந்துள்ளது. கடந்த 2-ந்தேதி வரை நீர்வரத்து இன்றி வைகை அணை காணப்பட்டது. அதன்பிறகு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு நிலவரப்படி வினாடிக்கு 60 கன அடி வீதம் நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 30.32 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 203 கன அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 381 மில்லியன் கன அடியாக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினமும், நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இதேபோல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 1,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு மற்றும் பலத்த மழை காரணமாக வைகை அணைக்கு நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் நேற்றைய நிலவரப்படி வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 400 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டமும் 31 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 408 மில்லியன் கன அடியாக இருந்தது. வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குன்னூர் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் பலரும் அதை வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்