கொரோனா உறுதி செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் ‘சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு வருமான வரித்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-08-07 22:23 GMT
சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்ணன் (வயது 54). இவரது மனைவி கலா. மணிகண்ணன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதி, கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள வருமானவரி அலுவலகத்தில் மூத்த நுண்ணறிவு (உளவு) பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

மணிகண்ணனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று காலை அதேப்பகுதியில் 5-வது தெருவில் உள்ள தனது மற்றொறு வீட்டிற்கு சென்றுள்ளார்.

தூக்குபோட்டு தற்கொலை

வெகுநேரமாகியும் மணிகண்ணனை காணாததால் அவரது உறவினர்கள் 5-வது தெருவில் உள்ள மற்றொரு வீட்டிற்கு தேடி சென்றனர். அந்த வீட்டில் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டினர். வெகுநேரமாகியும் கதவு திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர். தகவல் அறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் அவரது உடலை பாதுகாப்பாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ பிடிக்கவில்லை

இதற்கிடையில் மணிகண்ணன் தற்கொலைக்கு முன்பு தன் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் ‘எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதத்தில் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்