கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

பணகுடியில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-08-07 23:47 GMT
பணகுடி,

நெல்லை மாவட்டம் பணகுடி கலைஞர் நகரில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இங்கு கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த தவசிலிங்கம் (வயது 55), சிவகங்கை மாவட்டம் இந்திரா நகரைச் சேர்ந்த செந்தூர்பாண்டி (45) ஆகியோரும் தங்கியிருந்து தொழிலாளர்களாக வேலை செய்தனர்.

இந்த நிலையில் தவசிலிங்கம், செந்தூர்பாண்டி ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக கடந்த 1-ந் தேதி அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செந்தூர்பாண்டி, தவசிலிங்கத்தை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினார்.

கொலை வழக்காக மாற்றம்

இதில் படுகாயம் அடைந்த தவசிலிங்கத்தை நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். இதுதொடர்பாக பணகுடி போலீசார் செந்தூர்பாண்டி மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி தவசிலிங்கம் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செந்தூர்பாண்டி மீதான கொலைமுயற்சி வழக்கை, கொலைவழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர்.

விஷம் குடித்து தற்கொலை முயற்சி

இதனால் செந்தூர்பாண்டி தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சி, நேற்று கோழிப்பண்ணையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அவரை சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்