சேலத்தில் 563 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் 46,572 பேருக்கு சிகிச்சை: மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தகவல்

563 இடங்களில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்களில் 46,572 பேருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-08 01:33 GMT
சேலம்,

சேலத்தில் 563 இடங்களில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்களில் 46,572 பேருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவுவதை முற்றிலுமாக தடுத்திடும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாநகரில் வசிக்கக்கூடிய அனைத்து பொது மக்களின் உடல்நிலையை கண்காணித்து அவர்களை தொற்று நோயில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த மாதம் 10-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 28 நாட்களில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 563 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் மொத்தம் 46 ஆயிரத்து 572 நபர்களுக்கு மருத்துவ குழுவினரால் பரிசோதனைகளை மேற்கொண்டு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில், கொரோனா நோய் தொற்று அறிகுறிகளான காய்ச்சல், வறட்டு இருமல், சளி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறிகள் உள்ள 1,217 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில், 14 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட 6 ஆயிரத்து 374 பேருக்கு, 868 கர்ப்பிணிகளுக்கும், 523 குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி மருத்துவ பரிசோதனைகளில் 927 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 816 நபருக்கு நீரிழிவு நோய் மற்றும் 742 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் என நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 485 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு 2 மாதத்துக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. முகாமிற்கு வந்த அனைவருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக்குடிநீர், ஓமியோபதி மாத்திரைகள், வைட்டமின்-ஏ மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்