திருக்கழுக்குன்றம் அருகே ஊரடங்கு நேரத்தில் தொலைக்காட்சி படப்பிடிப்பு நடத்தியதால் பரபரப்பு

திருக்கழுக்குன்றம் அருகே ஊரடங்கு நேரத்தில் தொலைக்காட்சி படப்பிடிப்பு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-08-09 01:45 GMT
கல்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த மதுரா இரும்புலி கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் நேற்று காலை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடருக்காக திரைப்பட குழுவினர் படப்பிடிப்பு நடத்திகொண்டிருந்தனர்.

இதில் பங்கேற்க கேமராமேன், நடிகர், நடிகைகள் என 25-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடினர். கொரோனா தொற்று இருப்பதால் கிராம மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஆண்டினா பாண்டிமாதேவி, “இப்போது கொரோனா தொற்று பரவல் உள்ளது. நோய் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது. எனவே இந்த பகுதியில் யாரும் கூட்டமாக நிற்கவோ, படப்பிடிப்பை நடத்தவோ கூடாது. உடனே எல்லோரும் கலைந்து செல்லுங்கள்” என்று கூறினார்.

கலைந்து செல்வதாக உறுதி

ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் படப்பிடிப்பு குழுவினர் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறை ஆய்வாளர் ஜேம்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு நேரில் வந்த வருவாய் ஆய்வாளர், படப்பிடிப்பு குழுவினரிடம் இருந்து கேமரா உள்பட பொருட்களை பறிமுதல் செய்தார். அதன் பின்னர் படப்பிடிப்பு குழுவினர் கலைந்து செல்வதாக உறுதி கூறினர்.

இதையடுத்து வருவாய்த்துறையினர் கேமராவை அவர்களிடம் ஒப்படைத்து எச்சரித்து அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்