ஈரோட்டில் பயங்கரம்: வாலிபரை எரித்து படுகொலை செய்து உடல் வீச்சு - யார் அவர்? போலீஸ் விசாரணை

வாலிபரை எரித்து படுகொலை செய்து விட்டு உடலை ஈரோட்டில் வீசி சென்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இறந்த வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-08-09 06:07 GMT
ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் கணபதிநகர் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு வசதியாக 3 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்காக குப்பை தொட்டிக்கு வந்தனர்.

அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன் கார்த்திக் குமார், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

மேலும் மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் இறந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘இறந்த வாலிபரின் உடல், முகம் முதல் இடுப்பு வரை எரிந்த நிலையில் உள்ளது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. கொலையாளிகள், வேறு எங்கேயோ வைத்து எரித்து படுகொலை செய்து விட்டு உடலை இங்கு வீசிச்சென்று உள்ளனர். ஏனெனில் வாலிபர் உடல் கிடந்த இடம் அருகே தீவைத்து எரிக்கப்பட்டதற்கான எந்தவித தடயங்களும் இல்லை’ என்றனர்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக அவர் எரித்து படுகொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றார்கள்.

வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டு உடலை ஈரோட்டில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்