கந்த சஷ்டி கவசம் கொச்சைப்படுத்தப்பட்டதை கண்டித்து வேல்-முருகர் படத்துக்கு பூஜை

கந்த சஷ்டி கவசம் கொச்சைப்படுத்தப்பட்டதை கண்டித்து, தமிழகத்தில் நேற்று வேல் மற்றும் முருகர் படத்துக்கு பூஜைகள் நடைபெற்றது. சென்னையில், தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் பங்கேற்றார்.

Update: 2020-08-10 00:17 GMT
சென்னை, 

தமிழ் கடவுள் முருகனை வேண்டிப்பாடும் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் வகையில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து, தமிழகத்தில் உள்ள ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் வேண்டுகோளை ஏற்று, நேற்று மாலை வீடுகள்தோறும், வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என பா.ஜனதா கட்சி, இந்து அமைப்புகள், மடாதிபதிகள், துறவியர்கள், ஆதினங்கள் மற்றும் ஆன்மிக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதன்படி, தமிழகத்தில் ஏராளமானோர் தங்களது வீடுகளில் வேல் மற்றும் முருகர் படத்தை வைத்து பூஜை செய்தனர். கந்த சஷ்டி பாராயணமும் செய்தனர். மேலும் நேற்று டுவிட்டரில் “வேல் பூஜா” ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு, இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது.

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது வீட்டில் வேல் பூஜை செய்தார்.

பிரபல ரவுடி இணைந்தாரா?

பின்னர், எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, தாமாக முன்வந்து பலர் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். மேலும் பலர் பா.ஜ.க.வுக்கு வருவார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரபல ரவுடி கல்வெட்டு ரவி கட்சியில் இணைந்ததாக சொன்னார்கள். அதுபற்றி விசாரித்து தான் சொல்லவேண்டும். அ.தி.மு.க. உடனான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறது. 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வானதி சீனிவாசன்

இதேபோல், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் முருகர் படம் மற்றும் வேல் வைத்து பூஜை செய்தார். இதில் பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மற்றொரு பொதுச் செயலாளரான கே.டி.ராகவன் சிங்கம்பெருமாள் கோவிலில் முருகர் படம் மற்றும் வேல் வைத்து பூஜை செய்தார்.

மேலும், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் உள்ளிட்ட ஏராளமானோர் அவரவர் வீடுகளில் வேல் பூஜை செய்து கந்தசஷ்டி பாராயணம் செய்தனர். பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா அடையாறில் உள்ள இல்லத்திலும் தனியாக வேல் பூஜை செய்தார். இதேபோல், லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் தாங்களாகவே முன்வந்து வேல் பூஜை செய்தனர்.

மேலும் செய்திகள்