மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்கள் அனைவரின் உடல்களையும் மீட்க வேண்டும் உறவினர்கள் கண்ணீர் பேட்டி

மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்கள் அனைவரின் உடல்களையும் மீட்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர்மல்க கூறினர்.

Update: 2020-08-10 02:00 GMT
கயத்தாறு,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி மலைப்பகுதியில் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில், கடந்த 6-ந்தேதி இரவில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வசித்த ஏராளமான தமிழர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். தொடர்ந்து 3 நாட்களாக அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 43 தொழிலாளர்கள் பிணமாக மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி மாயமான பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அங்கு வசித்தவர்களில் பெரும்பாலானவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் இங்குள்ள அவர்களது உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். தொடர்ந்து உறவினர்கள் 60 பேர், இ-பாஸ் பெற்று, 2 வேன்கள், 6 கார்கள் ஆகியவற்றில் கேரள மாநிலத்துக்கு சென்றனர். ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், இறந்த தொழிலாளர்களின் உடல்களை அடையாளம் காட்டிய பின்னர் உறவினர்கள் அனைவரும் உடனே திருப்பி அனுப்பப்பட்டனர்.

நேற்று அதிகாலையில் கயத்தாறுக்கு திரும்பி வந்த உறவினர்கள் கூறியதாவது:-

அனுமதி மறுப்பு

மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில், கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த 85 தொழிலாளர்களும் சிக்கி உள்ளனர். அவர்களில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவில் சிக்கிய கயத்தாறு பகுதியைச் சேர்ந்த மற்ற தொழிலாளர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. அவர்களையும் மீட்க வேண்டும்.

நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு உரிய அனுமதியுடன் இ-பாஸ் பெற்று, கேரள மாநிலத்துக்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றோம். கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வழியாக கேரள மாநில எல்லையான சின்னாறு வழியாக சென்றோம். ஆனால் சின்னாறு சோதனைச்சாவடியில் இருந்த கேரள மாநில போலீசார் எங்களை அனுமதிக்க மறுத்து, காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும் காத்திருக்க வைத்தனர்.

அழுகுரல்

பின்னர் அவர்களிடம் வாக்குவாதம் செய்ததில், எங்களில் 2 பேருக்கு அடி உதை விழுந்து காயம் அடைந்தோம். பின்னர் ஒரு ஜீப்பில் மட்டுமே செல்ல அனுமதித்தனர். அதில் 18 பேர் ஏறி, மலைப்பாங்கான பகுதி வழியாக 12 கிலோ மீட்டர் பயணித்தோம். நிலச்சரிவு நிகழ்ந்த இடத்துக்கு மதியம் 3.30 மணி அளவில் சென்றடைந்தோம்.

அங்கு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்களின் உடல் களை சவப்பெட்டிகளில் வரிசையாக வைத்து இருந்தனர். அவர்களின் முகத்தை ஒரு நிமிடம் மட்டுமே திறந்து பார்க்க அனுமதித்தனர். பெரும்பாலானவர்களின் உடல்கள் சிதைந்து இருந்தது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. காணும் திசையெல்லாம் உறவினர்களின் அழுகுரலாகவே இருந்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், அனைவரையும் அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.

மீட்க வேண்டும்

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, குடியிருப்பு பகுதியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாங்குளம் பகுதியில் ஒருவரது உடல் மீட்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவில் சிக்கிய குடியிருப்புகள் அனைத்தும் சின்னாபின்னமாகி விட்டது. அங்கு மின்சாரமும் இல்லை. தொடர்ந்து மழையும் பெய்து வருகிறது. இதனால் பகலில் மட்டுமே மீட்பு பணிகள் நடைபெறுகிறது. 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கிய அனைவரின் உடல்களையும் மீட்க வேண்டும்.

நிலச்சரிவு நிகழ்ந்த பகுதியின் அருகே வசித்த மற்ற 40 தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வர தயாராக உள்ளனர். அவர் களை அரசு மீட்டு வர வேண்டும். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல் களை ராஜமலை பகுதியில் ஒரே இடத்தில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்கள் அனைவரும் தமிழர் கள். அவர்களை இழந்து நாங்கள் அனாதையாக தவிக்கிறோம். நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்களின் உடல் களை புதைக்கும் இடத்தில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும். அங்கு ஆண்டுதோறும் சென்று, உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு, இரு மாநில அரசுகளும் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

புளியங்குடி

மூணாறு அருகே நடந்த நிலச்சரிவில் சிக்கிய தென்காசி மாவட்டம் புளியங்குடி ரத்தினபுரியைச் சேர்ந்த காந்திராஜனின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய அவரது குடும்பத்தினர் 6 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோன்று சங்கரன்கோவில் அருகே புதுகிராமம், நெல்லை மாவட்டம் மானூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர் களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களது உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

தாசில்தார் ஆறுதல்

நிலச்சரிவில் சிக்கியவர்களில் நேற்று மாலை வரையிலும் 43 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதில் 18 பேர் கயத்தாறு பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், மற்றவர்கள் புளியங்குடி, கீழ பிள்ளையார்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்டவர்கள் கயத்தாறு பாரதிநகருக்கு சென்று, இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, பெயர் விவரங்களை சேகரித்தனர்.

மேலும் செய்திகள்