தனியார் துறை வேலைவாய்ப்புக்கு புதிய வலைதளம்-சிவகங்கை கலெக்டர் தகவல்

தமிழக அரசின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்புக்கான புதிய வலைதளம் தொடங்கப்பட்டு உள்ளது என்று சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

Update: 2020-08-09 22:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் அலுவலக அளவில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும், 3 மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட அளவிலான பெரிய வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முகாம்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வேலைதேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசால் தற்போது இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தும் வகையில் புதிதாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் தங்கள் கல்வித்தகுதிக்கு பொருத்தமான வேலையை எளிதில் தேர்வு செய்யும் வகையில் https://www.tnp-r-iv-at-e-j-obs.tn.gov.in என்ற வலைதளத்தை உருவாக்கி உள்ளது.

இந்த வலைதளத்தில் வேலை தேடும் இளைஞர்கள் தங்கள் கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களை பதிவு செய்து தங்களுக்கு பொருத்தமான பணி வாய்ப்பினை பெறலாம். இந்த வலைதளத்தில் மாவட்டம் வாரியாக, கல்வித்தகுதிமற்றும் சம்பளம் வாரியாக மற்றும் தொழில் வாரியாக பணிகளைதேர்வு செய்யும் வசதி உள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

மேற்காணும் இணையதளத்தில் தமிழக அளவில் இதுவரை 747 வேலையளிப்பவர்களும், 31,283 வேலைநாடுனர்களும் பதிவுசெய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் 12 வேலையளிப்பவர்களும் 493 வேலைநாடும் இளைஞர்களும் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்