சுஷாந்த் சிங்கிடம் பண மோசடி: நடிகை ரியாவிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை

சுஷாந்த் சிங்கிடம் பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் அமலாக்கத்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர்.

Update: 2020-08-10 22:45 GMT
மும்பை, 

எம்.எஸ்.தோனி:தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமான இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் தற்கொலைக்கு அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் குடும்பத்தினர் தான் காரணம் என பீகாரில் வசித்து வரும் நடிகரின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். மேலும் சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை நடிகை ரியா சக்கரபோர்த்தி, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், தொழில் மேலாளா் சுருதி மோடி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ரியாவின் வரவு, செலவு, முதலீட்டில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் முதல் நேற்று முன்தினம் அதிகாலை வரை சுமார் 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் ரியாவின் சகோதரர் சோவிக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதேபோல விசாரணைக்கு ஆஜராகுமாறு ரியா, அவரது தந்தை, சகோதரர் ஆகியோருக்கு மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்பேரில் நேற்று காலை 11 மணியளவில் மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ரியா, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக் ஆகியோர் வந்தனர். சிறிது நேரத்தில் ரியாவின் தொழில் மேலாளர் சுருதி மோடியும் விசாரணைக்கு அங்கு வந்தார். மதியம் 2 மணிக்கு சுஷாந்துடன் ஒரே வீட்டில் வசித்த அவரது நண்பர் சித்தார்த் பிதானியும் விசாரணைக்கு ஆஜரானார்.

ரியாவின் வருமானம், முதலீடுகள், தொழில், நடிப்பு அது சார்ந்த விவகாரங்கள், தொடர்புகள் சுற்றியே அமலாக்கத்துறையினர் அனைவரிடமும் விசாரணை நடத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 5 பேரிடமும் பெறப்பட்ட தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்தனர். ஒரே நாளில் ரியா உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதால் வழக்கில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்