பள்ளி ஆசிரியரிடம் ரூ.800 லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர் கைது

பள்ளி ஆசிரியரிடம் ரூ.800 லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர் கைது.

Update: 2020-08-11 20:59 GMT
மும்பை, 

பர்பானி மாவட்டம் சேலு தாலுகா குங்கிலிதாமன்காவ் பகுதியில் உள்ள தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஒருவர் தனது நிலுவையில் உள்ள ஊதியத்தை தரும்படி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தலைமை ஆசிரியர் பிரகாஷ் அம்புரே தனக்கு ரூ.800 லஞ்சம் தந்தால் நிலுவையில் உள்ள ஊதியத்தை தருவதாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் அவரிடம் பணம் தருவதாக கூறிவிட்டு, பின்னர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தலைமை ஆசிரியர் பிரகாஷ் அம்புரேவை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக ஆசிரியரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.800-ஐ கொடுத்து அனுப்பினர்.

இதன் பின்னர் ஆசிரியர் அந்த பணத்தை நேராக கொண்டு சென்று தலைமை ஆசிரியரிடம் கொடுத்தார். பணத்தை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் பிரகாஷ் அம்புரேவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்