சத்ரபதி சிவாஜி சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் பா.ஜனதா மவுனமாக இருப்பது ஏன்? சிவசேனா கேள்வி

கர்நாடகத்தில் சத்ரபதி சிவாஜி சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் பா.ஜனதா மவுனமாக இருப்பது ஏன்? என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2020-08-11 21:05 GMT
மும்பை,

கர்நாடக மாநிலத்தில் பெல்காம் மாவட்டம் மன்குட்டி கிராமத்தில் இருந்த சத்ரபதி சிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மராட்டிய பா.ஜனதாவில் உள்ள சிவாஜியின் பக்தர்கள் மவுனமாக இருப்பது ஏன் என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:- இரவோடு இரவாக சிவாஜி மன்னரின் சிலை அகற்றப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் மராட்டிய பா.ஜனதாவில் உள்ள சிவாஜியின் பக்தர்கள் மவுனமாக இருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது.

தேர்தல் ஆதாயம்

இந்த சம்பவம் காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவில் நடந்து இருந்தால் பா.ஜனதாவினர் அந்த மாநிலத்துக்கு அருகில் உள்ள சத்தாரா, சாங்கிலியில் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பாா்கள். ஆனால் தற்போது எப்படி அமைதியாக இருக்கிறார்கள் என பாருங்கள்!. சிவாஜி மன்னர் மீது உள்ள இந்த போலி பக்தியினால் என்ன பலன்?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல பா.ஜனதா கட்சி அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் சிவாஜி மன்னரின் பெயரை பயன்படுத்தி வருவதாகவும் சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் செய்திகள்