கொரோனா ஊரடங்கு காலத்தில் 5 கோடி புறநோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அமைச்சர் தகவல்

கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 5 கோடி புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Update: 2020-08-12 00:32 GMT
சென்னை, 


அ.தி.மு.க. அரசு முதல்- அமைச்சரின் தலைமையில், உலகளவில் கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்திலும், கொரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறது.

அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோய் தொற்று அல்லாத நோயாளிகளுக்கும் எவ்வித தங்கு தடையுமின்றி அவசரகால மருத்துவ சேவை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டு வருகிறது.

5 கோடி புறநோயாளிகள்

அதன்படி மார்ச் 2020 முதல் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 கோடியே 9 லட்சத்து 2 ஆயிரத்து 183 பேர் புறநோயாளிகளாகவும், 27 லட்சத்து 30 ஆயிரத்து 864 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரத்து 571 பிரசவங்களும், 68 ஆயிரத்து 479 ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சைகளும், 126 ஒருங்கிணைந்த பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தை அவசர சிகிச்சை சேவை மையங்களில் (சீமாங்) 1 லட்சத்து 29 ஆயிரத்து 206 பிரசவங்களும் நடைபெற்றுள்ளன. மேலும், பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுகளில் தமிழகம் முழுவதும் 33 ஆயிரத்து 374 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

அர்ப்பணிப்பு சேவை

கொரோனா தொற்றால் இதற்கு முன்னர் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில் அந்த பளுவையும் அரசு ஆஸ்பத்திரிகளில் திறம்பட எதிர்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவைகள் வழங்கப்பட்டது. இதனால் புறநோயாளிகள் மற்றும் பிரசவங்களின் எண்ணிக்கை அரசு ஆஸ்பத்திரிகளில் உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. அரசு முதல்- அமைச்சரின் தலைமையில் மக்கள் நலன் காக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்