விஜயநாராயணம் குளத்தின் கரையை பலப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

விஜயநாராயணம் குளத்தின் கரையை பலப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் கலெக்டரிடம், ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. கோரிக்கை.

Update: 2020-08-12 01:23 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்தனர். பின்னர் ரெட்டியார்பட்டி நாராயணன், கலெக்டர் ஷில்பாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட திசையன்விளை தாலுகாவில் விஜயநாராயணம் பெரியகுளம் உள்ளது. இந்த குளம் நெல்லை மாவட்டத்திலேயே அதிக கொள்ளளவு கொண்ட குளம் (310 மில்லியன் கனஅடி) ஆகும். இந்த குளத்தின் கரை 7 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த குளத்தில் 4 மதகுகள் உள்ளன. அதன் வழியாக சுமார் 3,500 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இரு போகமும் விளைச்சல் தரக்கூடிய குளம் ஆகும். இந்த குளத்தின் பாசனம் மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.

தற்போது கரையை பலப்படுத்த தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டம் மூலம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம் குடிமராமத்து பணி நடந்து வருகிறது. மேற்படி குளத்தின் கரையின் சுற்றளவு அதிகமாக இருப்பதால், கரையை பலப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்