திருவொற்றியூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி மதிப்பீட்டாளர் கைது உதவியாளரும் சிக்கினார்

திருவொற்றியூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி மதிப்பீட்டாளர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

Update: 2020-08-12 23:59 GMT
திருவொற்றியூர், 

சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர், தனது வீட்டின் வரி மதிப்பீட்டை அளப்பதற்காக சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த வரி மதிப்பீட்டாளர் பிரபு மற்றும் அவரது உதவியாளர் நல்லதம்பி ஆகியோர் வரி மதிப்பீட்டு அளவை செய்வதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

வரி மதிப்பீட்டாளர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், துணை கண்காணிப்பாளர் சங்கர் சுப்பிரமணியன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்துக்கு சென்றனர்.

அவர்கள் சுரேசிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதை லஞ்சமாக பிரபு மற்றும் நல்லதம்பியிடம் கொடுக்குமாறு கூறினர். அவ்வாறு சுரேஷ் பணத்தை கொடுக்கும்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பிரபு மற்றும் நல்லதம்பி ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்