இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்து மக்கள் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2020-08-13 00:46 GMT
நெல்லை, 

இந்து மக்கள் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தென்மண்டல செயலாளர் ராஜாபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் உடையார் முன்னிலை வகித்தார். தென்மண்டல மகளிர் அணி தலைவி காந்திமதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இந்து கோவில்களின் அருகில் தி.மு.க. ஆட்சி காலத்தில் வைத்த பெரியார் சிலைகள், கல்வெட்டுகளை அகற்ற வேண்டும். இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டவர்கள் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அப்போது அங்கு இருந்த ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பரமேசுவரன் ஆகியோர் இவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டனர்.

மேலும் செய்திகள்