திருத்தணி அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட பெண் கொலை 2 பேர் கைது

திருத்தணி அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-08-14 00:04 GMT
திருத்தணி,

திருத்தணி அருகே உள்ள பொன்பாடி மேட்டுகாலனியை சேர்ந்தவர் நவனீதம்மாள் (வயது 56). இவர் அதே பகுதியை சேர்ந்த சிவகாமி என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் கடன் கொடுத்திருந்தார். நேற்று முன்தினம் நவனீதம்மாள், தான் கொடுத்த கடனை திருப்பி வாங்குவதற்காக சிவகாமி வீட்டுக்கு சென்றார்.

அதன் பின்னர் அவர் திரும்பிவரவில்லை. நவனீதம்மாளின் மகன் சந்திரபாபு தன்னுடைய தாயை தேடி சிவகாமி வீட்டுக்கு சென்றார். அங்கு சிவகாமியின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சந்திரபாபு, திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த நிலையில் நவனீதம்மாள் அதே பகுதியில் உள்ள தங்கவேலு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பிணமாக கிடப்பதும், அவர் அணிந்து இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சிவகாமியும் தலைமறைவாகி இருந்தார்.

கைது

போலீசார் நவனீதம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு சிவகாமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிவகாமி, நெல்லூர் அக்கரிபேட்டையை சேர்ந்த சுரேஷ் (35) என்பவருடன் இருப்பதாகவும், அவர் பொன்பாடிமேட்டுகாலனியில் உள்ள தன்னுடைய மகன் சக்திவேலை பார்க்க வரவுள்ளதாகவும் போலீசார் அறிந்தனர். பொன்பாடி அருகே சிவகாமி மற்றும் சுரேஷ் ஆகியோர் வரும்போது அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

நகை பறிமுதல்

சிவகாமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-

நவனீதம்மாள் தான் கொடுத்த கடனை திரும்பி கேட்க என்னுடைய வீட்டுக்கு வந்தார். அவரை நைசாக வீட்டுக்குள் அழைத்து தன்னுடன் தங்கி இருந்த சுரேஷ் உதவியுடன் துண்டு மூலம் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அவர் அணிந்து இருந்த நகைகளை எடுத்துக்கொண்டோம்.

அவரது உடலை ஊருக்கு வெளியே போட்டு விட்டு ஆந்திராவுக்கு தப்பிச்சென்று விட்டோம். அந்த நகைகளை திருப்பதியில் அடமானம் வைத்து புதிதாக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வாங்கினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர்களிடம் இருந்து 6½ பவுன் நகைகளையும், எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர். பின்னர் கைதான இருவரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்