மாவட்டம் முழுவதும், 5¾ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச முக கவசங்கள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச முக கவசங்கள் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Update: 2020-08-13 22:45 GMT
விருதுநகர், 

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கண்ணன் தலைமை தாங்கினார். போலீஸ்சூப்பிரண்டு பெருமாள் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள கொரோனா நோய் பரவல் நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டத்தில் 3,114 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 10,629 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது 9,065 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நிர்வாகம் திறம்பட செயல்பட்டதினால் இம்மாவட்டத்தில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள்அடங்கிய மருத்துவ குழுக்கள்அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தலைமையிடத்தில் இருந்து வரும் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள 108 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் பரிசோதனைகளை விரைவாக மேற்கொண்டு கட்டுப்பாடுகளை தளர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் தலா 2 முக கவசங்கள் இலவசமாக வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நமது மாவட்டத்திலும் ரேஷன் கடைகள் மூலமாக 5 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு இலவச முக கவசங்கள் விரைவில் வழங்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கபசுரகுடிநீர், நிலவேம்பு கசாயம் சித்தமருத்துவ துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பாக தினந்தோறும் கபசுரகுடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்கள், போலீசார் அனைவரும் ஒருங்கிணைந்து கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் துண்டுபிரசுரங்கள் மற்றும் ஒலி பெருக்கி மூலமாக விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனைகளை அதிகப்படுத்தி நோய் தொற்று இல்லாத மாவட்டமாக்க அனைத்து அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியம், திட்ட இயக்குனர் சுரேஷ், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த சேத்தூர் போலீஸ்நிலைய ஏட்டு அய்யனார் என்பவரின் மனைவி மகேஸ்வரியிடமும், விருதுநகர் சின்னமூப்பன்பட்டி கிராம உதவியாளராக பணியாற்றிய முருகேசன் என்பவர் உயிரிழந்ததையொட்டி அவரது மனைவி பாண்டியம்மாளிடமும் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

திருத்தங்கல் - ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள பெரியார்காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன் (வயது 26). இவருக்கும் திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்த பிரகதிமோனிகா (24) என்பவருக்கும் கடந்த 1½ மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்தநிலையில் பிரகதிமோனிகாவை கொலை செய்து விட்டு அவரிடம் இருந்து நகையை பறித்து சென்றனர்.

நகைக்காக கொலை செய்யப்பட்ட பிரகதிமோனிகாவின் வீட்டுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று காலை சென்று பிரகதிமோனிகாவின் தந்தை முருகேசன், தாய் கீதாகவுரி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் தனது சொந்தநிதி ரூ.3 லட்சத்தை நிவாரண தொகையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், கருப்பசாமி, நகர செயலாளர் பொன்சக்திவேல், ரமணா, முன்னாள் கவுன்சிலர்கள் சேதுராமன், ரவிசெல்வம் உள்பட பலர் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் பிடித்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் இமானுவேல்ராஜ்குமார், வெங்கடாஜலபதி, ராஜா மற்றும் போலீசாரின் பணி பாராட்டுக்குரியது. இந்த கொலை வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை இந்த அரசு பெற்றுதரும். யாரும் தப்பிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்