திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2020-08-16 00:48 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்களையும், வெண் புறாக்களையும் பறக்க விட்டார்.

அதை தொடர்ந்து அவர் திறந்த வெளியில் வாகனத்தில் நின்றபடி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டர் அரசு செயல்படுத்தும் திட்டங்களில் பல்வேறு துறைகளை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட தொழில் மையம் சார்பில் ஒரு பயனாளிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் ரூ.73 லட்சத்துக்கான காசோலையையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு உணவகம் நடத்த அனுமதி கடிதத்தையும் வழங்கினார்.

பாராட்டு சான்றிதழ்

தாட்கோ சார்பாக மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி தொகை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் மானிய விலையில் விசைத்தெளிப்பான், தோட்டக்கலைத்துறை சார்பில் பசுமைக்குடில் அமைக்க ரூ.6 லட்சத்து 67 ஆயிரத்து 500 மதிப்பிலான பொருட்கள் என 5 துறைகளை சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.97 லட்சத்து 85 ஆயிரத்து 503 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, மருத்துவம் மற்றும் பொதுப்பணித்துறை, கூட்டுறவு மற்றும் வேளாண்மை துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் என 125 பேருக்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டு சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டு சான்றிதழ்களையும் கேடயங்களையும் கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜெயஸ்ரீ, திருவள்ளூர் ஆர்.டி.ஓ. பிரீத்தி பார்கவி, திருவள்ளூர் தாசில்தார் விஜயகுமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்