கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு 2 பேர் சாவு - விழுப்புரத்தில் 84 பேருக்கு தொற்று

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 84 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2020-08-15 22:30 GMT
கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5,033 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 49 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 4,330 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 654 பேர் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 400-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் மேலும் 84 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்களில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர், காணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், தும்பூர் அரசு பள்ளி ஆசிரியர், வானூர் தாலுகா அலுவலக துணை தாசில்தார், விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் இளமின் பொறியாளர், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் 2 ஊழியர்கள், செஞ்சி கிளை சிறையில் இருக்கும் விசாரணை கைதி உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 84 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,117 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 45 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 769 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த 56 வயதுடையவர், சின்னசேலம் அரசு மருத்துவ மனையில் மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டு, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல் வெங்கலம் கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனளிக்காமல் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே நேற்று 370 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 81 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 4857 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்