ஊரடங்கில் குடும்ப வறுமையால் விரக்தி: மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மாமல்லபுரம் அருகே ஊரடங்கால் போதிய வருமானம் இன்றி குடும்பம் வறுமையில் வாடியதால் விரக்தியடைந்த வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளி கல்லூரி மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-08-18 01:50 GMT
மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே தேவனேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவர் பகுதியை சேர்ந்தவர் வேளாங் கண்ணி. இவரது மகன் அந்தோணிராஜ் (வயது 19). வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் காதுகேளாதோர் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சகோதரி ஜெனிபர் என்பவரும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், குடும்ப கஷ்டத்திலும் கல்லூரியில் தொடர்ந்து படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி இவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஊரடங்கில் வீட்டில் மனமுடைந்து காணப்பட்ட அந்தோணிராஜ், வறுமை வாட்டியதால் விரக்தியில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்