திருப்பத்தூர் மாவட்டத்தில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்த தடை - கலெக்டர் சிவன்அருள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்த கலெக்டர் சிவன்அருள் தடை விதித்துள்ளார்.

Update: 2020-08-18 04:29 GMT
திருப்பத்தூர், 

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசு உத்தரவுபடி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இந்து முன்னணியினர் மற்றும் விழா குழுவினர் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் சிவன்அருள் பேசியதாவது:-

கொரோனா தொற்றால் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரிய, பெரிய விநாயகர் சிலைகளை அனைத்து பொது இடங்களில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவதும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டு, வழிகாட்டுதல் முறைகளை தெரிவித்துள்ளது. அந்த வழிகாட்டுதல் முறைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை முழுமையாக பின்பற்றி செயல்படும்.

தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் ஒன்றாகக் கூடி விநாயகர் சதுர்த்தி விழாவில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பங்கேற்பார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களை பாதுகாக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

விழா குழுவினர் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளிலேயே சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து, கொரோனா தொற்று பரவல் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளையும், சமூக விலகலையும் கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், சப்-கலெக்டர் அப்துல்முனிர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இந்து முன்னணி அமைப்பினர், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்