விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீடுகளிலேயே கொண்டாடி, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2020-08-20 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலை அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்து சென்று, நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி, அனுமதி இல்லையென முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

எனவே, பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைத்து தரப்பினரும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

எனவே அலுவலர்கள், போலீசார் அரசின் உத்தரவை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திட வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

சிறிய கோவில்களில் பொதுமக்கள் வழிபட, அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறுவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடி அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் எஸ்.பி.அம்ரித், உதவி கலெக்டர்(பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி கலெக்டர்கள் விஜயா (கோவில்பட்டி), தனப்பிரியா (திருச்செந்தூர்) மற்றும் அலுவலர்கள், பா.ஜனதா, இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்