‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: ஆர்.டி.ஓ. தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆர்.டி.ஓ. தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Update: 2020-08-21 00:56 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பகுதியில் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் அகழி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வடக்குஅலங்கம், மேலஅலங்கம், செக்கடி உள்ளிட்ட இடங்களில் அகழி கரையில் உள்ள 8 ஆயிரம் வீடுகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

பின்னர் இந்த திட்ட நடவடிக்கை பல்வேறு காரணங்களால் நின்றுபோனது. இந்தநிலையில் வடக்குஅலங்கத்தில் அகழியையொட்டி உள்ள வீடுகளை கணக்கெடுத்து வீட்டின் கதவுகளில் குறியீடு செய்யும் பணியை மாநகராட்சி பணியாளர்கள் தொடங்கினர். இந்த பணிக்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அமைதி பேச்சுவார்த்தை

இதையடுத்து நேற்று தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) வேலுமணி தலைமை தாங்கினார். ஆணையர் ஜானகிரவீந்திரன், தாசில்தார் வெங்கடேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். வீடுகளை இடித்தால் தங்களுக்கு மாற்று இடமாக மாநகராட்சி பகுதிக்குள் வீடுகள் கட்டி வழங்க வேண்டும். வல்லத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வேண்டாம் என தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் நகர் பகுதிக்குள் இடம் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும். இடம் இருந்தால் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்