போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதால் சாமியார் தற்கொலை வாட்ஸ்-அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு

தேவூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதால் சாமியார் தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் வாட்ஸ்-அப்பில் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-08-21 01:42 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள புளியம்பட்டி குண்டாங்கல் காடு பகுதியை சேர்ந்தவர் சாமியார் சரவணன் (வயது 40). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமியார் சரவணன் திடீரென்று மாயமாகி விட்டார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனிடையே அவரது வீட்டிற்கு அருகே உள்ள பாறை திட்டு பகுதியில் சாமியார் சரவணன், உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோவால் பரபரப்பு

சாமியார் சரவணன், அமாவாசை அன்று தன்னை தேடி வருபவர்களுக்கு தாயத்து கட்டுவது மற்றும் மந்திரகயிறு கட்டுவது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். மேலும் பேய்களை ஓட்டுவதாகவும் தெரிவித்து வந்தார். இதனிடையே அவர் தனது வீட்டின் அருகே 6 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, அதில் பெண்களை நிர்வாணப்படுத்தி பூஜை செய்ததாக தேவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அவரை சந்தித்து எச்சரித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே சாமியார் சரவணன் தான் இறப்பதற்கு முன்பு ஒரு வீடியோவை பதிவு செய்து தன் நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளார். தற்போது அந்த வாட்ஸ்-அப் வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் என்பவர் தன்னை தாக்கியதாகவும், தன் ஆன்மா அவரை சும்மா விடாது எனவும், போலீசார் தாக்கியதால் தான், நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

விசாரணை

இதை கைப்பற்றிய தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதால் சாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்