புதுக்கோட்டையில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

புதுக்கோட்டையில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது.

Update: 2020-08-21 23:16 GMT
புதுக்கோட்டை,

இன்று(சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி ஆகும். வழக்கமாக பொது இடங்களில் போலீசார் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர், மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் தேதியில் அந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மாறாக, அவரவர் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபட அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசின் தடை உத்தரவை தொடர்ந்து எங்காவது விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக என்று அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.

சிலைகள் அகற்றம்

இந்தநிலையில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி புதுக்கோட்டை அன்னச்சத்திரம் பகுதிக்கு சென்றபோது அங்கு சிறுவர்கள் சிலர், கொட்டகை அமைத்து அதில் 2 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்திருந்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கிருந்த சிறுவர்களை எச்சரிக்கை செய்ததோடு, விநாயகர் சிலையை அகற்றி எடுத்து சென்றனர்.

மேலும் செய்திகள்