காட்டாமணக்கு காய்களை தின்ற 11 சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி-மயக்கம் மருத்துவமனையில் அனுமதி

சீர்காழி அருகே காட்டாமணக்கு காய்களை தின்ற 11 சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2020-08-21 23:56 GMT
சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த புளிச்சக்காடு தோட்டமானியம் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்களான பரமசிவம், நேரு, சுரேஷ்குமார், கரிகாலன், குமார் ஆகியோர் நேற்று முன்தினம் காலையில் தங்களின் பிள்ளைகளை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றனர்.

இந்த நிலையில் அங்குள்ள வயல் பகுதிக்கு சென்று விளையாடிய காவியா(வயது 13), கவிப்பிரியன்(9), மணிகண்டன்(14), ராகுல்(9), பவதாரிணி(5), நவீண்(12), நித்தீஷ்(9), ஜெயஸ்ரீ(12), கவுதம்(10), பிரிதிவிராஜ்(11), சக்தி சரவணன்(7) உள்ளிட்ட 11 சிறுவர்-சிறுமிகள், வயலில் இருக்கும் காட்டாமணக்கு செடியில் இருந்த காய்களை பறித்து தின்று உள்ளனர்.

வாந்தி-மயக்கம்

பின்னர் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்பி விட்டனர். இந்த நிலையில் அன்று நள்ளிரவு வீட்டில் தூங்கிய சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது சிறுவர், சிறுமிகள் அனைவரும் கர்டடாமணக்கு காய்களை பறித்து தின்றதும், அதனால் அவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அனைவரும் தங்களின் பிள்ளைகளை சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்