50 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளை அரசு சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்துவது கட்டாயம் - மாநகராட்சி புதிய உத்தரவு

50 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளை அரசு சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்துவது கட்டாயம் என்று மும்பை மாநகராட்சி புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

Update: 2020-08-22 00:26 GMT
மும்பை,

கொரோனா நோயாளிகள் அரசு தனிமை மையங்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதில் மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை நோய் தொற்று அறிகுறியற்ற, லேசான அறிகுறி உள்ளவர்கள் மற்றும் வேறு எந்த முன் நோயும் இல்லாத 60 வயதுக்கு உட்பட்ட கொரோனா நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு வீடுகளில் தனி கழிப்பறை வசதி இருக்க வேண்டும்.

இந்த வழிகாட்டுதல் விதிமுறை தான் தற்போது நடைமுறையில் உள்ளது.

ஆனால் தற்போது இந்த வழிகாட்டுதலில் மும்பை மாநகராட்சி திருத்தம் செய்து உள்ளது. அதன்படி, இனி 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கொரோனா நோயாளிகளும் அரசு தனிமை மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வேறு எந்த முன்நோயும் இல்லாதவர்களாக இருந்தாலும் கூட இந்த விதிமுறை பொருந்தும். தனிமை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

50 முதல் 60 வயதுக்கு உட்பட்ட கொரோனா நோயாளிகள் தான் அதிக அளவில் இறப்புக்கு ஆளாகிறார்கள் என்பது இதுவரையிலான நிலவரப்படி தெரியவந்து உள்ளது. இதனை அடிப்படையாக வைத்து மாநகராட்சி இந்த புதிய முடிவை எடுத்து உள்ளது. இது இறப்பு விகிதத்தை குறைக்க உதவும் என்று மாநகராட்சி நம்புகிறது.

மேலும் செய்திகள்