ஈரோட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து வீடு புகுந்து பெண்ணிடம் கைவரிசை காட்டிய 3 பேர் கைது

ஈரோட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து வீடு புகுந்து பெண்ணிடம் கைவரிசை காட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-08-22 00:56 GMT
ஈரோடு,

ஈரோடு சுண்ணாம்பு ஓடை ரோஜா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி ரேவதி (வயது 55). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் வந்து, தங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என்று கூறி அறிமுகப்படுத்தி கொண்டனர்.

பின்னர் அவர்கள் ரேவதியிடம், ‘தங்கள் கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே நாங்கள் உங்கள் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளோம்’ என்று கூறி உள்ளனர். இதனால் ரேவதி தனது கணவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். அதற்கு அவர்கள், ‘உங்களுடைய கணவரை நாங்கள் கைது செய்துள்ளோம்’ என்றனர்.

புகார்

அதைத்தொடர்ந்து அவர்கள் சோதனை செய்வது போல் நடித்து வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிக்கொண்டு, ரேவதியிடம் பெயர், முகவரி, கையெழுத்து போன்றவற்றை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதைத்தொடர்ந்து ரேவதி தனது கணவருக்கு போன் செய்தார்.

அப்போது அவர் தான் கடையில் வியாபாரத்தில் இருப்பதாக கூறி உள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் கருங்கல்பாளையம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து வந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்த பாலாஜி என்கிற சவுந்தரபாண்டியன் (25), பள்ளிபாளையம் கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (19), சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த கிஷோர் (25) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து தான் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து ரேவதியின் வீட்டில் பணம் திருடிச்சென்றதும் தெரிய வந்தது.

மேலும் இவர்கள் இதே போன்று தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து பல்வேறு கடைகளில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்