சதுர்த்தி விழாவை வீடுகளில் வழிபட உத்தரவு: பக்தியுடன், பசுமைக்கு விருட்சமாகும் விதை விநாயகர் சிலைகள்

சதுர்த்தி விழாவை வீடுகளில் வழிபட அரசு உத்தரவிட்டதால், பக்தியுடன், பசுமைக்கு விருட்சமாகும் வகையில் விதை விநாயகர் சிலைகள் திண்டுக்கல்லில் விற்கப்படுகிறது.

Update: 2020-08-22 06:23 GMT
திண்டுக்கல்,

விநாயகர் சதுர்த்தி விழா என்றாலே, முக்கிய இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதும், அதன்பின்னர் நடைபெறும் ஊர்வலமும் தான் நினைவுக்கு வரும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

பொதுவாகவே விநாயகர் சதுர்த்தி நாளில், இந்துக்கள் வீடுகளில் சிறிய அளவில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். ஒருசில நாட்கள் கழித்து சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து விடுவார்கள். மேலும் அருகில் நீர்நிலை இல்லாதவர்கள் சிலை ஊர்வலம் நடைபெறும் நாளில், பெரிய விநாயகர் சிலையுடன் சேர்த்து வைத்துவிடுவார்கள். அதை விழா ஏற்பாட்டாளர்களும் சேர்த்து கரைப்பார்கள். மேலும் இந்த ஆண்டு அரசு உத்தரவால் வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது அதிகரித்து இருக்கிறது.

விதை விநாயகர்

அதோடு நீர்நிலை இல்லாத பகுதிகளில் வசிப்பவர்கள் ஊரடங்கால், விநாயகர் சிலைகளை வீடுகளிலேயே தண்ணீர் தொட்டி அமைத்து கரைக்க வேண்டியது இருக்கிறது. அதையும் பயனுள்ளதாக, திண்டுக்கல் சிலை தயாரிப்பாளர்கள் மாற்றி இருக்கின்றனர். அதன்படி விநாயகர் சிலைக்குள் ஏதேனும் ஒரு மரத்தின் விதையை வைத்து தயாரித்துள்ளனர். அதற்கு விதை விநாயகர் என்றும் பெயர் சூட்டி உள்ளனர்.

அந்த விநாயகர் சிலையை வீட்டு வளாகத்தில் தொட்டி அமைத்து கரைக்கும் போது, மண்ணுக்குள் புதையும் விதை சில நாட்களில் முளைத்து விடும். மேலும் விநாயகர் சிலைக்குள் வைத்த விதை முளைப்பதால், அதை ஆர்வமுடன் வளர்ப்பார்கள். வீட்டுக்கு ஒரு மரம் எனும் கனவு நனவாகி பசுமை உருவாகும். அதற்காக சிலைக்குள் விதை வைக்கப்படுகிறது. வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு பக்தியுடன், பசுமைக்கும் விருட்சமாக இருப்பதால் விதை விநாயகர் சிலைகளை திண்டுக்கல் மக்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

மரம் வளர்ப்பை ஊக்குவிக்க...

இதேபோல் பழனி இந்து சக்தி அமைப்பினர், மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் விதை விநாயகர் சிலைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில் விதைகளை ஒட்டி வைத்து வினியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும் காய்கறி செடிகள், பல்வேறு ரக மரங்களின் விதைகளை விநாயகர் சிலைகளில் ஒட்டி வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த சிலைகளை நாங்கள் வாங்கி, இந்து அமைப்பின் நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கியுள்ளோம். சதுர்த்தி விழாவின் போது இந்த சிலைகளை வீடுகளில் வைத்து வணங்கி, பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைக்காமல், ஒரு தொட்டியில் வைத்து தண்ணீர் ஊற்றினால், அதிலுள்ள விதைகள் முளைத்து செடியாக வளரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடையே மரம் வளர்ப்பில் ஆர்வம் ஏற்படும் என்றார்.

மேலும் செய்திகள்