நெல்லை - தென்காசியில் பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அகற்றம் 22 பேர் மீது வழக்குப்பதிவு

நெல்லை - தென்காசியில் பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் அகற்றினர். இதுதொடர்பாக 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-08-22 22:30 GMT
தென்காசி,

இந்துக்களால் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்து விநாயகர் வழிபாடு நடத்த வேண்டும் என்றும், சாலைகளில் ஊர்வலமாக கொண்டு செல்வது அல்லது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லையில் இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது வீடுகள் உள்ள பகுதியில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இதற்கு வருவாய்த்துறையினரும், போலீசாரும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த சிலைகளை பறிமுதல் செய்தனர். அப்படி பறிமுதல் செய்த சிலைகளை அந்த அமைப்பினர் தங்களது வீடுகளில் வைத்து வழிபாடு செய்கிறோம் என்று கூறியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

தச்சநல்லூர் வரம் தரும் விநாயகர் கோவில் அருகில் அனுமதி இல்லாமல் தடையை மீறி வைத்த விநாயகர் சிலையை போலீசாரும், வருவாய்த்துறையினரும் அங்கிருந்து அகற்றி பறிமுதல் செய்தனர். நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் அருகில், கோடீசுவரன்நகர் பகுதியில் வைத்த விநாயகர் சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்ய வந்தனர். அவர்களிடம், சிலைகளை வைத்த நிர்வாகிகள் தங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்ய உள்ளோம் என்று கூறிய உடனே அவர்களிடம் சிலைகளை ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து தென்காசியில் நேற்று வீடுகளில் வைத்து பொதுமக்கள் பூஜை நடத்தினர். வழக்கமாக தென்காசி நகரில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, அவை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, யானை பாலம் பகுதியில் சிற்றாற்றில் கரைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டினால் இவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

ஆனாலும் இவற்றை மீறி பா.ஜனதா மற்றும் இந்து முன்னணியினர், தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பகுதி, கீழப்புலியூர் இசக்கி அம்மன் கோவில் அருகில், தென்காசி கூலக்கடை பஜார் சந்தி விநாயகர் கோவில் முன்பகுதி ஆகிய 3 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்தனர். பின்னர் அதற்கு பூஜைகள் நடத்தினர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அந்த இடங்களுக்கு விரைந்து சென்று, அங்கிருந்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த சிலைகளை தனித்தனி லோடு ஆட்டோக்களில் ஏற்றி சென்று, யானை பாலம் பகுதியில் ஆற்றில் கரைத்தனர்.

தென்காசியில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்ததாக, இந்து முன்னணி நகர தலைவர் இசக்கிமுத்து, பா.ஜனதா மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார், நகர இளைஞர் அணி தலைவர் சங்கர சுப்பிரமணியன் உள்பட 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை சேர்வைக்காரன்புதூரில் உள்ள தையல் கடை முன்பு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், நகர தலைவர் மூர்த்தி ஆகியோர் நேற்று விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அந்த விநாயகர் சிலையை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இதனை கண்டித்து இந்து முன்னணியினர் கோஷமிட்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செங்கோட்டையில் கடை முன்பு வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்